
டெல்லி, மே 28- நாட்டின் பொது விநியோகத் திட்டத்தை (PDS) முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் முறைகேடுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மே 27, 2026 அன்று நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டத்தில் ‘சார்தக்-பிடிஎஸ்’ (SARTHAK-PDS) என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹25,530 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், முன்பு தனித்தனியே இயங்கி வந்த ‘ஸ்மார்ட் பிடிஎஸ்’ (SMART PDS) மற்றும் மாநிலங்களுக்குள் உணவு தானியங்கள் கொண்டு செல்லும் திட்டம், நியாயவிலைக் கடை முகவர்களின் கமிஷன் உதவித் திட்டம் ஆகியவற்றை ஒரே நிர்வாகக் குடையின் கீழ் கொண்டு வருகிறது. இதன் மூலம் நிர்வாகச் செலவுகள் கணிசமாகக் குறையும், நிதி விநியோகம் சீராகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் சுமார் 81.35 கோடி பயனாளிகள் பயனடையும் இந்தத் திட்டம், உணவு தானியங்கள் தகுதியானவர்களுக்கு தங்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும். மாநிலங்களுக்கான போக்குவரத்து மற்றும் கையாளுதல் செலவுகளை மத்திய அரசே ஏற்பதால், மாநில அரசுகளின் நிதிச் சுமை பெருமளவு குறையும். இத்திட்டம் மார்ச் 31, 2031 வரை செயல்படும். இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, நியாயவிலைக் கடை (FPS) முகவர்களின் கமிஷன் தொகை மற்றும் லாப வரம்பு (Dealer Margin) உயர்த்தப்பட உள்ளது. இதனால் உள்ளூர் ரேஷன் கடை ஊழியர்களின் பொருளாதார நிலை மேம்படும். எடை மோசடி, கசிவு போன்ற பிரச்னைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















