
சென்னை: ஜூன் 6-
‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவித்துள்ளார். மாநிலத்துக்கு சேவை செய்ய விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என அழைப்பும் விடுத்துள்ளார். சமூக மற்றும் கலாச்சார தளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வரும் லதா ரஜினிகாந்த், ‘மக்கள் மேடை’ என்ற புதிய மக்கள் இயக்கத்தை நேற்று தொடங்கியுள்ளார். ‘மக்கள் மேடை – இது மக்களின் இயக்கம்’ என்ற முழக்கத்துடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒன்றிணைவோம் என்ற நோக்கத்துடன் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: ‘மக்கள் மேடை’ என்ற எங்களது இயக்கத்துடன் சேர்ந்து இந்த மாநிலத்துக்காக சேவை செய்ய நினைக்கும் அனைவரும் ஒன்றாக சேரலாம். ஒன்றாக சேர்ந்து, ஒரு பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தி யாக உருவாகி இந்த மாநிலத்துக்கு பல நன்மைகளை செய்ய முன்வாருங்கள். ஒன்றாக சேர்வோம், ஆக்கபூர்வமான காரியங்களை செய்வோம்.
இந்த மக்கள் மேடை இயக்கத்தில் மூத்த குடிமக்கள், குடிமைப்பணி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தினர் என யாராக இருந்தாலும் உங்களின் அனுபவங்களை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களுடன் தொடர்பு கொண்டு, தமிழகத்துக்காகவும், அந்தந்த தொகுதிக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். மாநிலத்துக்காக வேலை செய்யும் உள்ளூர் தலைவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். மாநிலத்துக்கு தேவையான யோசனைகளை தந்து சேவையாற்ற விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைக்கோர்க்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


















