Home மாவட்டங்கள் பெங்களூர் லாரி மோதி கணவர் சாவு மனைவி கவலைக்கிடம்

லாரி மோதி கணவர் சாவு மனைவி கவலைக்கிடம்

பெங்களூரு: ஜூன் 3-
சாலை ஓரமாக பைக்கை நிறுத்த முயன்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதி கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வரும் அதிர்ச்சி சம்பவம் இன்று காலை ஆனேக்கல்லில் நடந்துள்ளது.
ஆனேக்கல் அருகே உள்ள உஸ்கூர் ஹாரஹள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் ரெட்டி (40). இவரது மனைவி பிரதிபா (36). விவசாயத்திற்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்குவதற்காக இந்த தம்பதியினர் இன்று காலை ஆனேக்கல் நகருக்கு வந்துள்ளனர்.
ஆனேக்கல் நகரின் மிர்சா சாலையில் உள்ள அப்போலோ மெடிக்கல் ஷாப் முன்பாக தங்களது பைக்கை நிறுத்த முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
லாரி சக்கரத்தில் சிக்கினர்
பின்னால் அதிவேகமாக வந்த லாரியிடம் இருந்து தப்புவதற்காக, மஞ்சுநாத் ரெட்டி பைக்கை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பிற பைக்குகள் மீது இவர்களது பைக் உரசியதில், நிலைதடுமாறி லாரியின் அடியில் விழுந்தனர்.
சாலை ஓரத்தில் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளுக்கும், வலதுபுறமாக வந்த லாரிக்கும் இடையே இவர்களது பைக் சிக்கிக்கொண்டது. இதில் கீழே விழுந்த தಂಪதி மீது லாரி ஏறியது. மஞ்சுநாத் ரெட்டி பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பிரதிபா, மேல் சிகிச்சைக்காக பொம்மசந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருகிறார்.
விபத்தை நேரில் பார்த்த முனிராஜ ரெட்டி கூறுகையில்:
மெடிக்கல் ஷாப் முன்பாக ஏராளமான பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது லாரி வந்துகொண்டிருந்தது. இவர்கள் பைக்கை ஓட்டி வந்தபோது, சாலை ஓரம் நின்ற பைக்குகள் மீது பட்டு லாரி வரும் பக்கமாக விழுந்துவிட்டனர். லாரி ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுத்தினார். டயர்களுக்கு இடையே சிக்கியிருந்த இருவரையும் நாங்கள் தான் மீட்டோம். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. மிகவும் தாமதமாகவே வந்தது,” என்றார்.
விபத்து நடந்தவுடன் ஆம்புலன்ஸிற்கு பலமுறை போன் செய்தும், அது சரியான நேரத்திற்கு வராததே மஞ்சுநாத் ரெட்டியின் மரணத்திற்கு காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த கடைக்காரர்களும், போலீசாரும் இணைந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆனேக்கல் போலீசார், வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.