
பெங்களூரு: ஜூலை 29-
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் நள்ளிரவில் ‘ரேவ் பார்ட்டி’ நடப்பதாக சிசிபி மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட ஹூக்கா, இ-சிகரெட் மற்றும் மதுபானங்களை பயன்படுத்தி இளைஞர்களும், இளம் பெண்களும் போதை ஆட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பார்ட்டியை ஏற்பாடு செய்த தீட்சித், வேதாந்த் பண்டிட், சங்கர் ஆகிய 3 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அங்கிருந்த பெண்களையும் பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், ரூ.20 ஆயிரம் வாடகையில் பங்களாவை எடுத்து, ‘அமிகோஸ்’ என்ற செல்போன் செயலி மூலம் வாலிபர்களுக்கு ரூ.1,099-ம், பெண்களுக்கு ரூ.499-ம் கட்டணம் வசூலித்து இந்த போதை பார்ட்டியை நடத்தியது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













