வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ஜனவரி 6-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், சில இடங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில், வரும் 9ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், இன்றும் நாளையும், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் சில இடங்களில் உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 10ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.