
அமெரிக்கா, ஜூன் 22- பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே அணி, முன்னாள் உலக சாம்பியனான உருகுவே அணியை 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் கேப் வெர்டே அணி தனது முதல் உலகக் கோப்பை கோலை பதிவு செய்து அசத்தியுள்ளது. முன்னதாக பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான தற்காப்பு ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்த கேப் வெர்டே, இம்முறை உருகுவே அணிக்கு எதிராக தனது சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கேப் வெர்டே வீரர் கெவின் பினா அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தார். இது உலகக் கோப்பை வரலாற்றில் கேப் வெர்டே அணி பதிவு செய்த முதல் கோலாகும். எனினும், முதல் பாதி முடிவடைவதற்கு சற்று முன்பாக உருகுவே அணியின் மேக்ஸி அராயுகோ மற்றும் அகஸ்டின் கனோபியோ ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து தங்கள் அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தனர். இரண்டாவது பாதியில் கேப் வெர்டே அணி புதிய உத்திகளுடன் விளையாடியது. மாற்று வீரர்களாக களமிறங்கிய நுனோ டா கோஸ்டா மற்றும் ஹெலியோ வரேலா ஆகியோர் அணியின் ஆட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தனர். ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் உருகுவே தற்காப்பு வீரர்களின் தவறால் கிடைத்த பந்தை சரியாகப் பயன்படுத்திய ஹெலியோ வரேலா, கோல்கீப்பரை ஏமாற்றி கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் இரு அணிகளும் வெற்றி கோல் அடிக்க தீவிரமாக போராடினாலும் கூடுதலாக கோல் எதுவும் விழவில்லை. இப்போட்டியில் கேப் வெர்டே அணியின் 40 வயதான கோல்கீப்பர் வோசின்ஹா, விசா பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அமெரிக்கா வந்திருந்த தனது தாயின் முன்னிலையில் விளையாடினார். ஆட்டத்தின் இறுதியில் உருகுவேயின் சில கோல் முயற்சிகள் ‘வார்’ (VAR) தொழில்நுட்பம் மூலம் நடுவரால் நிராகரிக்கப்பட்டன. முன்னாள் சாம்பியன் உருகுவே அணியை சமன் செய்துள்ள கேப் வெர்டே அணி, இந்த டிராவின் மூலம் தனது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை மேலும் நெருங்கியுள்ளது.





















