
புதுடெல்லி, மே 7- தவெக தலைவர் விஜய்க்கு, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், விஜய் பின்பற்ற வேண்டிய சட்டப்பேரவை மரபு முதல் அவர் பற்றிக்கொள்ள வேண்டிய கொள்கை வரை பட்டியலிட்டு 5 யோசனைகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம்: அன்புள்ள ஜோசப் விஜய் உங்களுடைய பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களுக்காக வாக்களித்த 35% மக்களில் நானில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது நான் மிரண்டு போனேன். அப்போது எனக்கு ஓர் எண்ணம் உதித்தது. விஜய் அரசியலுக்கு புதியவர். அனுபவமற்றவர். அதுவே அவர் சுத்தமானவர் என்பதற்கும் அடையாளம்.
அவருக்கு சில உண்மைகள் சொல்லப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அவருக்கு அது புரியும். அவருடைய நடுத்தர வயதில் அவரை இளைஞர்களின் ஞானம் தட்டி எழுப்பியுள்ளது. அதனால் சில விஷயங்களை நான் உங்கள் முன்னால் வைக்கலாமா? 1. முதலாவதாக, நீங்கள் வாக்குகள் வென்றுள்ளீர்கள். ஆனால் இன்னமும் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. நீங்கள் இந்தியாவின் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பதை முதன்மைக் கடமையாக செய்ய வேண்டியது அவசியம். உங்களின் கீழ் தமிழகம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மரியாதை சிதையாமல் பார்த்துக் கொள்ளட்டும். உங்கள் நாற்காலியை தக்கவைத்துக் கொள்வதற்கான எந்தவொரு இக்கட்டான தருணமும் அதில் நீங்கள் சமரசம் செய்துவிடாமல் பார்த்துக் கொள்ளட்டும்.
- இரண்டாவதாக, நீங்கள் சட்டப்பேரவைக்குள் விஜய்யாக நுழையுங்கள். உங்கள் பெயருக்கு அர்த்தமான வெற்றி உங்களுடன் வரும். ஆனால், வெற்றி என்பது மிடுக்கில் அல்ல, கற்றலில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


















