
சென்னை: மே. 5-
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லை. இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவெக, பெரும்பான்மையை பெற அதிமுக, திமுகவை உடைத்து பாமக, காங்கிரஸிடம் ஆதரவு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு மின்னஞ்சல் வாயிலாக அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனது கட்சியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் கால அவகாசத்தையும் கேட்டுள்ளார். இந்த கடிதத்தின் பேரில் ஆளுநர் எப்போது ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில், தவெக 108 இடங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 118 இடங்கள் இல்லாததால் தமிழகத்தில் ஒரு ‘தொங்கு சட்டசபை’ சூழல் நிலவுகிறது. சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் 15 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று விஜய் கோரியிருக்கும் நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவார் என சொல்லப்படுகிறது.
தவெக 108 இடங்களில் வென்றதால் பெரும்பான்மைக்கு 10 இடங்களே தேவை என நீங்கள் கணக்கு போட்டால் அது தவறு! 11 இடங்கள் தேவை. அதாவது விஜய் இரு தொகுதிகளில் வென்றதால் ஒரு தொகுதியை மட்டுமே தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளும். அப்படி பார்த்தால் தற்போது தவெகவின் பலம் 107 -தான். மீதமுள்ள 11 பேரின் ஆதரவை விஜய் எப்படி கேட்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


















