
சென்னை, அக். 3-
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வீரமணி மீது, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். சிறுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில், கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளரான வீரமணி (84), ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது இதுவரை 4 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் வீரமணி மீது சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தற்போது புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. வீரமணி சிறையில் தீவிர பாதுகாப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு படுக்கை, நாற்காலி, நாளிதழ் ஆகியவை மட்டுமே வசதிகளாக உள்ளதாக சிறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற கைதிகளுடன் அவர் அரிதாகவே பேசுவதாகவும், சிறை ஊழியர்களுடனும் அதிகம் உரையாடுவதில்லை என்றும் சிறை அதிகாரிகள் கூறினர். நீண்ட நேரம் தனிமையிலேயே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சிறைக்குள் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்புப் பாதையில் மட்டும் அவர் சிறிது நேரம் நடக்க அனுமதிக்கப்படுகிறார். அவரது மகள் மற்றும் சில வழக்குரைஞர்கள் மட்டுமே அவரை சந்தித்துள்ளனர். சிறை ஊழியர்கள் யாரும் தேவையின்றி அவரை சந்திக்க அனுமதி இல்லை. சட்டவிரோத சலுகை வழங்கியதாகப் புகார் எழுந்துவிடக்கூடும் என்பதால் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வீரமணி தொடர்பான வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பல சிறுமிகள் மற்றும் சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. விசாரணை முடிந்ததும், நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













