Home விளையாட்டு ஹகீமி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

ஹகீமி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சியாட்டில், ஜூன் 20-மொராக்கோ நட்சத்திர கால்பந்து வீரர் அஷ்ரப் ஹகீமி மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 2023 மார்ச் மாதத்தில், 24 வயது பெண் ஒருவர் பாரிஸ் புறநகரில் உள்ள ஹகீமியின் வீட்டில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் மீது ஆரம்பகட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மொராக்கோ நட்சத்திர பாதுகாப்பு வீரரான ஹகீமி, தற்போது உலகக் கோப்பை போட்டியில் மொராக்கோ அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்னர், பிப்ரவரி மாதம் விசாரணை நீதிபதி எடுத்திருந்த விசாரணைக்கு அனுப்பும் முடிவை அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அதற்கு முன்பே அரசு வழக்கறிஞர்களும் ஹகீமி மீது வழக்கு விசாரணை நடத்த பரிந்துரைத்திருந்தனர். மொராக்கோ மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான உலகக் கோப்பை போட்டி நடைபெற சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த நீதிமன்ற முடிவு வெளியானது. தனது முதல் போட்டியில் மொராக்கோ, பிரேசிலுடன் 1-1 என்ற கோல் கணக்கில் ட்ரா செய்தது. உலகின் சிறந்த ரைட் விங் வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஹகீமி, தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். வெர்செய்ல்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் நீதித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் ஹகீமி மீது விசாரணை நடத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.