
திருப்பரங்குன்றம் ஆக.22- மலை விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக, தி.மு.க., அரசு செயல்படுவதாக, ஹிந்து தமிழர் கட்சியின் நிறு வன தலைவர் ராம ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார் .
அவரது அறிக்கை:
கடந்த, 2024 டிசம்பர் 5ம் தேதி, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில், ஆடு, கோழி பலியிட்டு, கந்துாரி கொடுக்க முயன்ற ஐந்து பேரை காவல் துறையினர் தடுத்தனர்.
இதை எதிர்த்து, அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிசம்பர், 31ல் திருமங்கலம் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு நடந்தது. அதில், இந்த பிரச்னைக்கு நீதிமன்றத்தில் தீர்வு காண்பது என, முடிவெடுக்கப்பட்டது.
இந்தாண்டு ஜனவரி 16ம் தேதி, திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஹிந்து தமிழர் கட்சி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் சார்பில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி, வெட்டி பலியிட இருப்பதை தடுக்கக்கோரி, மதுரை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம். ஆடு, கோழி பலியிட அனுமதி கோரி, தர்கா நிர்வாகத்தினரும் மனு அளித்தனர்.இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது, திருப்பரங்குன்றம் மலையின் தொன்மை குறித்த ஆவணங்களை மற்றும் கோவில் பட்டர்கள், பரிசாகர்களின் கருத்துக்களை ஹிந்து சமய அறநிலையத்துறை சமர்ப்பித்துள்ளது.
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை, கைலாய மலைக்கு இணையானது. சிவலிங்க வடிவமாக காட்சியளிக்கும் இந்த மலை, தெற்கு கைலாய மலை. மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகேயுள்ள சுனை, பாதாள கங்கை என்று, அழைக்கப்படுகிறது.
போகர் என்ற சித்தர், இங்கு நீராடி சிவ வழிபாடு செய்தார்; மச்ச முனீஸ்வரர் என்ற சித்தர் சாப விமோசனம் பெற்ற சுனை தீர்த்தம் இது. இப்படிப்பட்ட புனிதமான மலையில் ஆடு, கோழிகளை பலியிடும் வழக்கம் இல்லை என்பதை, பெரியவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். அசைவ உணவு சாப்பிட்ட எலும்பு துண்டுகள், எச்சில் இலைகள் சுனையில் விழுந்தால், தீர்த்தத்தின் புனிதத் தன்மை கெடுவதோடு, பக்தர்களின் மனதும் புண்படும். அதனால் தான், மலை மீது உயிர் பலி கொடுக்க, இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை; அப்படி பலி கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. மலைக்கு கீழே உள்ள முஸ்லிம் பேட்டையில் தான், ஆடு பலி கொடுத்து, சமைத்து சாப்பிட்டுள்ளனர்.