Home மாவட்டங்கள் பெங்களூர் 2-வது முறையாக ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் பவித்ரா கவுடா மனு

2-வது முறையாக ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் பவித்ரா கவுடா மனு

பெங்களூரு, நவ. 24-
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பவித்ரா கவுடா, 2-வது முறையாக ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த நிலையில், தற்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 439-ன் கீழ் பவித்ரா கவுடா தரப்பில் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று ஐகோர்ட்டு நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக பவித்ரா கவுடா பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபடியே வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது முக்கிய சாட்சிகள் தங்களது முந்தைய வாக்குமூலங்களில் இருந்து பின்வாங்கியுள்ளனர். மேலும், தங்களது மனுதாரருக்கு எதிராக விசாரணையில் எந்தவொரு வலுவான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று பவித்ரா கவுடா தரப்பு வக்கீல்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, கோர்ட்டு தகுந்த நிபந்தனைகளை விதித்து பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 26-ந்தேதி 59-வது சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் கோர்ட்டு பவித்ரா கவுடாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. தற்போது வக்கீல் நாராயணசாமி மூலமாக ஐகோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.