
சண்டிகர்: ஜூன் 11-
ஏற்றுமதியாளர்கள், தொழில்துறை அமைப்புகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளின் மாநாடு சண்டிகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நிதின் குமார் யாதவ் ஆற்றிய உரையில் கூறியதாவது:2014-15 நிதியாண்டில் 468 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 2025-26 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக 863 பில்லியன் டாலராக (ரூ.82 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. ஏற்றுமதி ஆண்டுக்கு 5.7% கூட்டு வளர்ச்சி அடைந்துள்ளது.இந்தக் காலகட்டத்தில், சரக்கு ஏற்றுமதி 310 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 442 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. சேவை ஏற்றுமதி 158 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஆண்டுக்கு 9.3% கூட்டு வளர்ச்சி விகிதத்தில் 421 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.மேலும், பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 387.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியின் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.100 பில்லியன் டாலர் நேரடி அந்நிய முதலீட்டு வாக்குறுதியுடன் கூடிய இந்தியா- ஐரோப்பா இடையிலான தடையற்ற வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம், இந்தியாவின் 98% ஏற்றுமதிக்கு வரி இல்லா அனுமதியை வழங்குகிறது.அதிக வருவாய் ஈட்டும் 27 பொருளாதாரங்களை உள்ளடக்கிய இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (2026), 99% இருதரப்பு வர்த்தகத்திற்கு வரி சலுகைகளுடன் ரூ.3.2 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய ஏற்றுமதிக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















