Home செய்திகள் உலக செய்திகள் 3 கப்பல்கள் தாக்குதல்: 42 இந்திய பணியாளர்கள் மீட்பு: 9 பேர் பலி

3 கப்பல்கள் தாக்குதல்: 42 இந்திய பணியாளர்கள் மீட்பு: 9 பேர் பலி

தெஹ்ரான்: செப். 12
மேற்காசியாவில் நடந்து வரும் ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், இந்திய பணியாளர்களுடன் வெளிநாட்டு கொடிகளை கொண்ட 3 சரக்கு கப்பல்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜிம்பாப்வே கொடியுடன் கூடிய கச்சா எண்ணெய் கப்பலான ரீஸ்கோ, பலாவ் கொடியுடன் கூடிய சமையல் எரிவாயு கப்பல் ஹாரிசான் 1 மற்றும் லைபீரிய கொடியுடன் கூடிய கச்சா எண்ணெய் கப்பலான மெர்சின் பிராஸ்பெரிட்டி ஆகியவை தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் ஆகும்.
இதில் முதலில், கடந்த 8-ந்தேதி இரவு ஓமன் வளைகுடா பகுதியில் ரீஸ்கோ கப்பல் தாக்கப்பட்டது.
அமெரிக்க கடற்படையினர் நடத்திய இந்த தாக்குதலின்போது, கப்பலில் 21 இந்திய ஊழியர்கள் இருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் உடனடியாக பாதுகாப்பாக கப்பலை விட்டு வெளியேறி, ஈரான் துறைமுகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதே 8-ந்தேதி இரவு 11.30 மணியளவில் ஹாரிசான் 1 கப்பலும் தாக்கப்பட்டது. அந்த கப்பலில் 14 இந்தியர்கள் மற்றும் ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 16 ஊழியர்கள் இருந்தனர். அருகில் இருந்த மற்றொரு கப்பலின் உதவியுடன் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அதற்கு அடுத்த நாள், புஜைரா பகுதியருகே மெர்சின் பிராஸ்பெரிட்டி கப்பலை ஏவுகணை ஒன்று தாக்கியது.
அந்த கப்பலில் 7 இந்திய பணியாளர்கள் இருந்தனர். எனினும், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனால், 3 கப்பல்களிலும் இருந்த மொத்தம் 42 இந்திய ஊழியர்கள் கடுமையான தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளனர்.
ஈரான்-அமெரிக்கா மோதல் மேற்காசியாவில் தொடங்கியதில் இருந்து இதுவரை, இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் மீது 4 முறையும், இந்திய பணியாளர்களுடன் வெளிநாட்டு கொடிகளை கொண்ட கப்பல்கள் மீது 50 முறையும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் இதுவரை 9 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 12 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் தெரியவருகிறது.