திருப்பதி திருமலை ஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு

திருப்பதி: நவம்பர் 17
திருப்பதி ஏழுமலையானை வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி கோவிலில் உள்ள ஆர்ஜித சேவைகளான சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அருகில் இருந்து ஏழுமலையானை தரிசிக்க விரும்புவோர் நாளைய வாய்ப்பை தவறவிட வேண்டாம். தென் இந்தியாவின் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவில்களில் திருப்பதி முக்கியமானது. திருப்பதி மலைகளில் ஒன்றான திருமலையில், ஏழுமலையான் என்று பக்தர்களால் போற்றப்படும் வெங்கடாசலபதி அருள் பாலிக்கிறார். இவரை தெலுங்கு மக்கள் பாலாஜி என்று அன்புடன் அழைக்கிறார்கள். திருப்பதிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேஷாசலம் மலையில் திருமலை அமைந்துள்ளது. வெங்கடேச பெருமாளை நடந்து சென்றும், வாகனங்களில் சென்றும் தரிசிக்கலாம். திருமலையை அடைவதற்கு மூன்று நடைப்பாதைகள் உள்ளன. கடப்பாவிலிருந்து திருமலைக்கு செல்ல குக்கலா தொட்டி வழியாக ஒரு வழி இருக்கிறது. இது அன்னமய்யா நடந்து வந்த பாதை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த வழித்தடத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இரண்டாவது ஸ்ரீவாரி மெட்டில் இருந்து தொடங்கும் நடைபாதை. இவ்வழியாக அதிக பக்தர்கள் செல்வது கிடையாது. மூன்றாவது, அலிபிரியில் இருந்து தொடங்கும் படிக்கட்டு. திருமலைக்கு நடந்து செல்ல விரும்பும் பெரும்பாலான பக்தர்கள் இந்த வழியாகத்தான் செல்கின்றனர். படிக்கட்டில் நடந்து செல்வார்கள். இவர்கள் படிக்கட்டு வழியாக நடந்தே வருவதால், சுவாமியை தரிசிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் பொது தரிசனத்தில் நின்று பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டும். அதேநேரம் திருப்பதி ஏழுமலையான விரைவாக தரிசிக்க வேண்டும் என்றால், 300 ரூபாய் டிக்கெட்டுகளை பெற வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கான டிக்கெட்டும் இரண்டுமாதங்களுக்கு முன்பே வெளியிடப்படும். அந்த வகையில் பிப்ரவரி மாத டிக்கெட் நவம்பரிலேயே வெளியிடப்பட்டுள்ளது.