கலிபோர்னியாவை புரட்டிப்போடும் புயல்:

லாஸ் ஏஞ்சலஸ்:டிசம்பர் 26- அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் டிசம்பர் 25ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. குறிப்பாக, தெற்கு கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலஸில் கனமழையும், மேற்கு மற்றும் வடக்கு கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடுமையான புயல் காற்றும் வீசி வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று வீசுவதால், இந்தப் புயலை ‘கிறிஸ்துமஸ் புயல்’ என்று அழைக்கின்றனர். மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் இந்தப் புயல் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக, கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில் மழை மற்றும் புயல் காரணமாக நடந்த விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். சியரா நெவாடா மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.