
சென்னை: மார்ச் 5-
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உட்பட தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதேபோல், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதர கட்சிகளுக்கான பங்கீடு ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், காங்கிரஸ் 40 தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினர் கேட்டதால், தொகு திப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த சூழலில் நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைமையிடமும் அவர் பேசி சூழலை சுமூகமாக்கியதாகவும், திமுக தரப்பில் கனிமொழியும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, திமுக – காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக நேற்று காலை தகவல்கள் வெளியாகின.
அதன்படி, கோவாவில் இருந்து விமானம் மூலம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னைக்கு நேற்று மாலை வந்தார். அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார்.

















