Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியாவில் வீசும் காவி அலை..” மம்தா கோட்டையைத் தகர்த்த மோடி- அமித் ஷா

இந்தியாவில் வீசும் காவி அலை..” மம்தா கோட்டையைத் தகர்த்த மோடி- அமித் ஷா

கொல்கத்தா: மே 5-
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அம்மாநில அரசியலில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆரம்பத்தில் இழுபறி இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் அதைத் தாண்டி, மிகப் பெரிய வெற்றியை பாஜக பெற்றுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் காவி அலை வீசுவதாகச் சொல்லி பாஜக போட்டோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது.
“வங்காளம் இன்று நினைப்பதை, இந்தியா நாளை நினைக்கும்” – இது ஒருகாலத்தில் சொல்லப்பட்ட புகழ்பெற்ற வாசகம். ஆனால், 2026 தேர்தல் முடிவுகள் மூலம் மேற்கு வங்க மாநிலம் தனது நீரோட்டத்தில் இணைத்துள்ளதாகப் பாஜக கொண்டாடி வருகிறது. மேற்கு வங்கத்தில் கடும் போட்டி இருக்கும், பாஜகவுக்கு லேசாக எட்ஜ் இருக்கும் என்றே பெரும்பாலான மேற்கு வங்க எக்சிட் போல்கள் கணித்தன.
க்ளீன் ஸ்வீப் ஆனால், அந்தத் தடைகளையெல்லாம் தகர்த்து, க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பெற்று, பாஜக அரியணையைப் பிடித்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 இடங்கள் உள்ள நிலையில்,
அதில் பாஜக 204 தொகுதிகளில் வென்றுள்ளது. மறுபுறம் ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 81 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த 2021 தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாத காங்கிரஸ் இந்த முறை இரு இடங்களில் வென்றுள்ளது. இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு பாஜகவினர், நாட்டில் காவி அலை வீசுவதாகச் சொல்லிப் போட்டோ ஒன்றைப் பகிர்ந்து வருகிறார்கள். அதில் காவி அலை வங்காளத்தை அடைந்துவிட்டதாகச் சொல்லி வருகிறார்கள். அந்தப் படத்தில் இந்தியா முழுவதும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆரஞ்சு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
காவி அலை குறிப்பாக, பல ஆண்டுகளாக இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் பிடியில் இருந்த மேற்கு வங்கம், இப்போது காவி நிறத்திற்கு மாறியிருப்பதை அந்தப் போட்டோ காட்டுகிறது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் முதல் தெற்கே ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி வரை இந்த ‘காவி அலை’ பரவியுள்ளதாக அந்த மேப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மம்தா பானர்ஜியின் ‘வங்கத்து மகள்’ என்ற முழக்கத்தை மீறி, பாஜகவின் ‘வளர்ச்சி மற்றும் மாற்றம்’ என்ற முழக்கம் அங்கு வேலை செய்துள்ளது.
92% மக்கள் வாக்களித்ததே இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு அடிப்படை. இருப்பினும், இந்த வெற்றி என்பது வெறும் அதிகார மாற்றம் மட்டுமல்ல.. தகர்க்கவே முடியாது என்று கருதப்பட்ட மம்தாவின் கோட்டையை சுமார் 15 ஆண்டு முயற்சிக்குப் பிறகு பாஜக தகர்த்துள்ளது.