
புதுடெல்லி: மார்ச் 6-
கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்காக அமைச்சகங்கள் செய்த பணிகளின் விவரத்தைக் கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இவற்றை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த 2024-ல் நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், முக்கியப் போட்டியாளரான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றார். இவருடன் பதவியில் அமர்ந்த மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி தொடர்ந்து மக்கள் பணி செய்ய வலியுறுத்தி வருகிறார். இந்த வகையில் அவர், கடந்த இரண்டு வருடங்களில் மத்திய அமைச்சகங்கள் மக்களுக்காக செய்த பணிகள் என்ன எனக் கேட்டிருக்கிறார். இந்த தரவுகளை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி அனைத்து அமைச்சர்களுக்கும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘அனைத்து அமைச்சர்களும் அந்தந்த அமைச்சகங்களில் முக்கிய சீர்திருத்தங்கள் குறித்த விரிவான விளக்கக் காட்சியைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புள்ளிவிவரங்களுடனான தரவுகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலம் அமைக்கங்களிலான சீர்திருத்தங்களின் தாக்கத்தை விளக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2024-ல் புதிய அரசு அமைந்த பிறகு அமைக்கங்களின் சீர்திருத்தங்கள் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை பிரதமர் மோடி அறிய விரும்புகிறார். இதில், மத்திய அரசின் கொள்கை மாற்றங்கள், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் இடம்பெற்றுள்ளன.
அரசு சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தில் முன்னேற்றங்கள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புகளின் மீதான மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் விளக்கும் படி கோரப்பட்டுள்ளது. இவை பொதுமக்களுக்கு எவ்வாறு பயனளித்துள்ளது என்பதை பிரதமர் மோடி தன் பிரச்சாரங்களில் வெளிப்படுத்த விரும்புகிறார்.இதன் மீதான விளக்கக் காட்சிகளில் சீர்திருத்தங்களின் பின்னணி, நோக்கங்கள், செயல்படுத்தல் செயல்முறை, எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றின் தீர்வுகள் மற்றும் அடையப்பட்ட முடிவுகள் பற்றிய உண்மை விவரம் இருக்கும். கொள்கை வகுப்பது மட்டுமல்ல, அவற்றை திறம்பட செயல்படுத்துவதும், களத்தில் முடிவுகளை உறுதி செய்வதும் ஒரு பொறுப்பான அரசின் முன்னுரிமை என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
















