சென்னை, ஏப்ரல்.29-
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும், மூன்றாம் இடத்தில் தவெகவும் இடம்பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
என்டிடிவி ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி திமுக 125 தொகுதிகள் முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தவெக 18-24 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-6 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணி 169 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 64 தொகுதிகளிலும், தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி திமுக 145-160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 50-65 தொகுதிகளிலும், தவெக 13-18 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5-8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ரிஸ்’வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக 122 -132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87-100 தொகுதிகளிலும், தவெக 10-12 தொகுதிகளிலும், மற்றவர்கள் 0-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக்-பி மார்க்’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி 125-145 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 65-85 தொகுதிகளிலும், தவெக 16-26 தொகுதிகளிலும், மற்றவர்கள் 1-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன.
அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி நடந்து முடிந்தது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிந்தது. மேற்குவங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தல் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் முடிவுக்கு வந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 85.1% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.




















