Home செய்திகள் உலக செய்திகள் பெட்ரோல் – டீசல் விலை உயரும் அபாயம்

பெட்ரோல் – டீசல் விலை உயரும் அபாயம்

வாஷிங்டன்: மார்ச் 7-
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு புதிய உச்சத்தை கச்சா எண்ணெய் தொட்டுள்ளதால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை உச்சமடைய வாய்ப்புள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்து வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் சார்பில் சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், ஓமன் உள்ளிட்ட அரபு நாடுகள் குறிவைத்து தாக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கியாஸ் கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப்பாதையை ஈரான் மூடியுள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் உலகில் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும். தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா, சீனா உள்பட பல ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை கிடைக்காத நிலை உள்ளது. மேலும் விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை இருந்தது.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், ”ஈரான் நிபந்தனைகள் ஏதுமின்றி சரணடைய வேண்டும். அப்போது தான் போர் நிறுத்தப்படும்” என்று கூறியுள்ளார். இதற்கு ஈரான் ஒப்புக்கொள்ள சான்ஸ் இல்லை. இதனால் இந்த போர் நீண்டகாலம் நடக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இபு்படியான சூழலில் தான் தற்போது கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கி உள்ளது. WTI (West TexasIntermediate) ஒப்பந்தங்களின் கச்சா எண்ணெய் விலை 12.2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90.90 அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டுக்கு பின் ஒரு வாரத்தில் உயர்ந்த அதிகபட்ச விலையாக இது உள்ளது. பெட்ரோல் – டீசல் விலை உயர்வு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பல நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இதனால் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும்போது அது நேரடியாக பெட்ரோல், டீசல் மீது எதிரொலிக்கும். இதனால் பெட்ரோல், டீசல் விலை உச்சமடைய வாய்ப்புள்ளது.
குறிப்பாக இந்தியாவை பாதிக்கலாம். இதுபற்றி சாம் கோ செக்யூரிட்டீஸ் ஆய்வு பிரிவு தலைவர் அபூர்வா ஷேத் கூறுகையில், “அமெரிக்கா-ஈரான் மோதல் கச்சா எண்ணெய் விலைகளை உயர்ந்த நிலையிலேயே வைத்திருக்கும். இந்த மோதல் எரிபொருள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகத்துக்கான தடையை ஏற்படுத்தும். இந்த போர் தொடரும் பட்சத்தில் இந்தியா பாதிக்கப்படலாம்” என்றார்.