
அகமதாபாத். மார்ச் 9- குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 கோப்பையை 3-வது முறையாகக் கைப்பற்றியது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையையும் இந்திய அணி படைத்தது. இந்திய அணி கடந்த 2007 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் மகுடம் சூடியிருந்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை. அதிகபட்சமாக மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துஅணிகள் தலா 2 முறை மட்டுமே கோப்பையை வென்றிருந்தன. பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.14.65 கோடியை பெற்றது. ஆட்டநாயகனாக பும்ராவும், தொடர் நாயகனாக சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டனர். போட்டிக்குப் பின்னர் இந்திய வீரர் திலக் வர்மா கூறியதாவது: “டி20 கோப்பையை தக்கவைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையைக் கூற வேண்டும் என்றால் கோப்பையை வெல்வதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் தயாராகி வந்தோம். அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கோப்பையைக் கைப்பற்றியுள்ளோம். தேவையான நேரத்தில் நமது வீரர்கள் ஃபீல்டிங்கில் அபார திறமையை வெளிப்படுத்தி னார்கள். இன்றைய தினத்தில் நாங்கள் சிறந்த ஃபீல்டிங்கை செய்தோம் என்று நான் கூறமாட்டேன்.இந்தப் போட்டியில் சில நல்ல கேட்ச்களை பிடித்து எதிரணி வீரர்களை வெளியேற்றினோம். இறுதிப் போட்டியில் வென்றது மிகவும் மகிழ்ச்சி. அடுத்த 2 நாட்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் உற்சாகத்திலேயே இருப்போம்.” அர்ஷ்தீப் சிங்: “டேரில் மிட்செல்லுக்கு வீசும்போது பந்து அவரைத் தாக்கிவிட்டது. இதனால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்க ஓடினேன். கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் திளைப்பது அருமையாக உள்ளது. இன்னும் 2 முதல் 4 நாட்களுக்கு இந்த உற்சாகம் இருக்கும். ஏராளமான மேட்ச் வின்னர்கள் அணியில் உள்ளனர். எனவே, இது சிறந்த இந்திய அணியாக உள்ளது. நாம் 250 ரன்களுக்கு மேல் குவித்து விட்டு, எதிரணியை 250 ரன்களுக்குள் கட்டுப் படுத்துவதுதான் பந்து வீச்சாளர்களின் வேலை.” ஷிவம் துபே: “போட்டியில் என்னுடைய பங்கு என்பது எப்போதும் பெரிய அளவிலான சிக்ஸர்களை விளாசுவதுதான். இந்தப் போட்டியின் முதல் நாளில் இருந்தே என்னுடைய பங்காக அதை நான் நினைக்கிறேன்.




















