
புதுவை: மார்ச் 9 –
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவையில் மகளிர் உரிமைத் தொகை ரூ 5000 வரவு வைக்கப்படுவதாக அந்த மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார். இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை பார்த்து மற்ற மாநிலங்களும் பெண்களுக்கு இந்த உரிமைத்தொகையை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் புதுவையில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அதாவது 21 வயது முதல் 55 வயதுக்குள்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 65 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வந்தது.
இதற்காக 6.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த உரிமைத் தொகை ரூ 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதற்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதலும் அளித்தார். இந்த முறையால் அரசுக்கு கூடுதலாக 9.75 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டது. அது போல் எந்த உரிமைத் தொகையும் பெறாத மஞ்சள் ரேஷன்கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என ரங்கசாமி சட்டசபை மானிய கோரிக்கையின் போது அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் இல்லத்தரசிகள் பயன்பெறுவர் என சொல்லப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 10 கோடி ரூபாய் செலவாகும் என சொல்லப்பட்டது.
அது போல் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரூ 3000 ரொக்கம் கொடுக்கப்பட்டது. இதை பின்பற்றி புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு, ரேஷன் கார்டுக்கு ரூ 3000 ரொக்கமும், ரூ 750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பும் வழங்கியது.
இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானால் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்க இயலாது என்பதால் 3 மாதத்திற்கான உரிமைத் தொகையும் கோடைக்கால நிவாரணமாக ரூ 2 ஆயிரம் சேர்த்து ரூ 5 ஆயிரம் மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை புதுவை மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து புதுவையில் மகளிர் உரிமைத் தொகையை 2 மாதங்களுக்கு முன்பே கொடுக்க அதற்கான நிதியை முன் கூட்டியே வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்த சமயத்தில்தான் ஆளுநர் கைலாஷ்நாதன் பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் புதுவையில் 63 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த 2 மாதங்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ 2500 வீதம் மொத்தம் ரூ 5000 வழங்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

















