
புதுடெல்லி: மார்ச் 9-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாணவர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை நேற்று வெளியிட்டார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “பெண்கள் ஆண்களை விட அதி புத்திசாலிகள். எனது குடும்பத்தில் என் பாட்டிதான் (இந்திரா காந்தி) பாஸ். பெண்கள் தான் குடும்பத்தின் உண்மையான தலைவர்கள் என்பதைப் பார்த்து வளர்ந்தவன் நான். எனது குடும்பத்தில் எப்போதும் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும்.
ஆண்களைப் பொருத்தவரையில் எதற்கும் அவசரப்படுபவர்களாகவும், தேவையற்ற விஷயங்களில் கவனத்தைச் சிதறவிடுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், பெண்கள் நேரடி அதிகாரத்தைச் செலுத்தாமல், மறைமுக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதுவே மிகவும் பலனளிக்கக் கூடியதாக இருக்கிறது.
பெண்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து செயல்பட்டால், சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். பெண்கள் முன்னேற முழு உரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.


















