
கொல்கத்தா: மே 4-
மேற்கு வங்க மாநிலம் பால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியதைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்து 285 வாக்குச் சாவடிகளிலும் மறுதேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மே 21-ம் தேதி மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும்; மே 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இன்று 293 தொகுதிகளுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் கறுப்பு நிற டேப் ஒட்டி வாக்குகளைத் தடுத்தது முதல், வாக்காளர்களைக் கண்டறிய வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தியது வரை பல்வேறு முறைகேடுகள் குறித்த முக்கிய தகவல்களை தேர்தல் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது.பால்டா தொகுதியில் முறையான வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததோடு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குறிப்பிட்ட வேட்பாளர்களின் சின்னங்களுக்கு நேராக கறுப்பு நிற டேப் ஒட்டப்பட்டு, அந்தப் பொத்தான்களை அழுத்த முடியாதபடி முடக்கியதாக புகார்கள் எழுந்தது. மேலும், அதிர்ச்சியூட்டும் தகவலாக, வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தான்களில் வாசனைத் திரவியம் மற்றும் மையைப் பூசி, வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களின் விரல்களில் ஏற்படும் வாசனை மற்றும் நிறத்தை வைத்து அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதைக் கண்டறியும் சட்டவிரோதச் செயல்களும் பல வாக்குச் சாவடிகளில் அரங்கேறியுள்ளன. இது வாக்களிப்பதன் ரகசியத் தன்மையை முற்றிலுமாகச் சிதைப்பதாக அமைந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தொகுதி முழுவதும் பரவலாக வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதையும், உண்மையான வாக்காளர்கள் மிரட்டப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டதையும் தேர்தல் பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளனர். தேர்தல் அலுவலர்களே வாக்காளர்களுக்கு வழிகாட்டுவது போல வாக்குப்பதிவு அறைக்குள் நுழைந்து முறைகேடுகளிலும் ஈடுபட்டது வீடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.


















