Home தலைப்பு செய்தி பெங்களூரில் பல இடங்களில் ஓட்டல்கள் மூடல்

பெங்களூரில் பல இடங்களில் ஓட்டல்கள் மூடல்

புதுடெல்லி: மார்ச் 10-
ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பெரும் போர் சூழல் ஏற்பட்டுள்ளது எதிரொலியாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சமாளிக்க மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கி உள்ளது. ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தி அந்த நாட்டை சீர்குலைத்தது அந்த நாட்டின் உச்சபட்ச தலைவரை படுகொலை செய்தது. இதன் காரணமாக கடும் ஆவேசம் அடைந்துள்ள ஈரான் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது அதே சமயத்தில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கடல் பாதையை மூடியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தற்போது இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக பெங்களூரில் பல்வேறு இடங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், வரும் நாட்களில் எரிவாயு சிலிண்டர்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைகள்:
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இக்குழு உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயற்கை எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும். வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிலிண்டர்களைப் பதுக்குவதையும், கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க, ஒரு சிலிண்டர் பதிவு செய்த பிறகு அடுத்த பதிவிற்கு 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் துறைகள்: மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான எரிவாயு விநியோகத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “தற்போதைய போர்ச் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்ய எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடுத்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் எல்பிஜி கையிருப்பு தட்டுப்பாடு இல்லை என்றும், செயற்கையான தட்டுப்பாட்டைத் தவிர்க்கவே முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.