
சென்னை: மார்ச் 12-
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கேட்டரிங் சர்வீஸ் நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதனால் திருமண விழாக்களில் கடைசி நேரத்தில் சமையல் ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டதால் திருமண வீட்டார் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வரும் 16ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் கேஸ் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்யுமாறும் திருமண வீட்டாரை சமையல் கலைஞர்கள் நெருக்குவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
நாளுக்கு நாள் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் திருமணங்கள் உள்ளிட்ட சுப விசேஷங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பங்குனி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை பிறக்கவுள்ளதால் முகூர்த்த நாட்களில் சுப விசேஷங்கள் செய்ய மக்கள் முன்கூட்டியே மண்டபங்களை புக் செய்துள்ளார்கள். அதுபோல் சமையலுக்கு கேட்டரிங்கிலும் சொல்லியாகிவிட்டது. எனவே கவலையே இல்லாமல் திருமண ஏற்பாடுகளை செய்யலாம் என நினைத்த திருமண வீட்டாருக்கு இடி விழுந்துள்ளது. அதாவது ஒரு நபருக்கு அடுத்த வாரம் திருமணம் வைத்துள்ள நிலையில் திடீரென எதிர்பாராதவிதமாக கேட்டரிங் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோரிக்கை வந்துள்ளதாம். அதில் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுவதால் உங்கள் சைடில் இருந்தும் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார்கள்.
ஏற்கனவே திருமண ஏற்பாடுகளை அவசர அவசரமாக செய்து வரும் நிலையில் தற்போது கடைசி நேரத்தில் இது போல் ஒரு நெருக்கடியை சமையல் கலைஞர்கள் கொடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனி மாதம் வரை திருமணம் செய்ய முகூர்த்தம் குறிக்கப்பட்டு, மண்டபம், கேட்டரிங்கிற்கு அட்வான்ஸும் கொடுத்துள்ள நிலையில் சிலிண்டர் இல்லாத நிலையால் திருமண வீட்டார் விழிபிதுங்கி உள்ளனர்.


















