
பெங்களூர், மார்ச் 12- பெங்களூரில் ஒன்றாக ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே வசித்து வந்தவர் கோபால் (வயது 41). இவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். நேற்று முன்தினம் கோபால் தனது காரில் ஆனேக்கல் அருகே கர்ப்பூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை இன்னொரு கார் பின்தொடர்ந்து வந்தது. திடீரென்று கோபாலின் காரை பின்பக்கத்தில் இருந்து மோதியது. பிறகு காரை பின்தொடர்ந்து சென்றது. இதனால் பயந்துபோன கோபால் காரை நிறுத்தினார். காரில் கடத்தல் இதையடுத்து கண்இமைக்கும் நொடியில் பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் கோபாலை அவரது காரில் இருந்து தங்களின் காரில் ஏற்றி கடத்தியது. இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் ஆனேக்கல் போலீசில் புகார் செய்தனர். கோபாலை மீட்டு தர வேண்டும். அவரை கடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர், உறவினர்கள் ஆனேக்கல் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கோபாலை மீட்பதாக கூறினர். ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
















