
புதுடெல்லி, மார்ச் 13- அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கான சமையல் காஸ் சிலிண்டர் பதிவு செய்யும் கால அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் கிடைக்காததால் பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இந்நிலையில் எச்சிஎல் டெக் ஐ.டி. நிறுவனத்தின் சென்னை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. நிலைமை சீராகும் வரை அவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றும், ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளை நிறுவனம் வழங்கும் என்றும் எச்சிஎல் டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
















