
துபாய், மார்ச் 13- ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி காரணமாக இந்தியாவிலேயே தங்கியிருந்த தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளின் வீரர்கள் நேற்று இந்தியாவிலிருந்து புறப்பட்டு தாயகம் சென்றனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற்ற வந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 8-ம் தேதி நிறைவு பெற்றது. இந்நிலையில் ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதால் தென் ஆப்பிரிக்க, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளின் வீரர்கள் தாயகம் திரும்பிச் செல்ல முடியாமல் கொல்கத்தா நகரிலேயே தங்கியிருந்தனர். இதையடுத்து அவர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்புவதற்கான பணிகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஈடுபட்டு வந்தது. இந்த வகையில் நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் விமானம் மூலம் அவர்களது நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த 9 வீரர்கள் 2 நாட்களுக்கு முன்பு அவர்களது தாய்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். எஞ்சியிருந்த 16 வீரர்கள் நேற்று இயக்கப்பட்ட விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த 29 வீரர்கள், நிர்வாகிகள் நேற்று விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 24 மணி நேரத்துக்குள் தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த 29 பேரும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த 16 பேரும் பல்வேறு விமானங்கள் மூலம் தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். போர்மேகங்கள் சூழ்ந்துள்ள கடினமான சூழ்நிலையில் அவர்களை பத்திரமாக தாய்நாட்டில் சேர்ப்பதற்கான பணிகளை ஐசிசி செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


















