
மவுண்ட் மவுங்கனு, மார்ச் 16- நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மவுண்ட் மவுங்கனுவில் நேற்று முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 14.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் 15, ஜேம்ஸ் நீஷம் 26, கோல் மெக்கோன்சி 15, பெவன் ஜேக்கப்ஸ் 10 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் நக்கோபனி மோகோய்னா 3, ஜெரால்டு கோட்ஸி, ஓட்நீல் பார்ட்மேன், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் சாய்த்தனர். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டோனி டி ஜோர்ஸி 2, ரூபின் ஹெர்மான் 7, ஜேசன் ஸ்மித் 10 ரன்கள் எடுத்தனர். கானர் எஸ்டர்ஹுய்சான் 45, டியான் பாரஸ்டர் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நாளை (மார்ச் 17) ஹாமில்டனில் நடைபெறவுள்ளது. ஆட்டநாயகனாக நக்கோபனி மோகோய்னா தேர்வானார்.



















