
சென்னை: மார்ச் 16-
தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. பரபரப்பான நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பிரம்மாண்ட கூட்டணி அமைத்து களத்தில் திமுக முன்னணியில் உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு அது 16 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி இன்று (மார்ச் 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் பங்கேற்கவுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளனர். கள நிலவரம், திமுகவின் பிரச்சார வியூகங்கள், எதிர்க்கட்சிகளை எப்படி கையாள வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால் இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.


















