
ஹைதராபாத், ஏப்ரல் 18- மகளிர் இடஒதுக்கீட்டு சட்ட திருத்த மசோதாவுடன் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கான 2 மசோதாக்களையும் இன்று எதிர்க்கட்சியினர் சேர்ந்து லோக்சபாவில் தோல்வியடை செய்தனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீட்டுக்கான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026, மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill 2026) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 ஆகியவற்றின் மீது லோக்சபாவில் இன்று ஓட்டெடுப்பு நடந்தது. 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு இருந்தால் இந்த மசோதா வெற்றி பெறும். ஆனால் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. இதனால் அந்த மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்டன. மசோதா மீதான வாக்கெடுப்பில் 489 எம்பிக்கள் பங்கேற்றனர். மசோதாவுக்கு ஆதரவாக 278 பேர் வாக்களித்தனர். எதிராக 211 பேர் வாக்களித்தனர். மசோதா நிறைவேற்ற 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் லோக்சபாவில் மசோதா தோல்வியடைந்தது. இந்நிலையில் தான் மசோதா தோல்வியடைய செய்யப்பட்டதை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‘’இந்திய வரலாற்றில் இன்றைய தினம் பொன்னான நாளாக நினைவில் வைக்கப்படும். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இணைந்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒரங்கிணைந்து நாட்டின் பேரழிவை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இத்தகைய கருப்பு சட்டங்களை முறியடிக்கும் வகையில் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு உறுதியுடன் நின்ற பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன்.



















