Home மாவட்டங்கள் பெங்களூர் கைகூடாத ராகுல் – ஸ்டாலின் கூட்டுப் பிரச்சாரம்

கைகூடாத ராகுல் – ஸ்டாலின் கூட்டுப் பிரச்சாரம்

சென்னை: ஏப்ரல் 18-
சட்டப்பேரவை தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில், ராகுல் காந்தியும், ஸ்டாலினும் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளாதது திமுக கூட்டணி கட்சி தொண்டர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
தேர்தல் பேச்சுவார்த்தை தொடங்கிய நாள் முதலே திமுக-வுக்கும் காங்கிரஸுக்கும் சரிப்பட்டு வரவில்லை. தொகுதிகள் எண்ணிக்கை, விருப்பமான தொகுதிகள் என அனைத்திலுமே திமுக-வுடன் போராட்டம் நடத்தியது காங்கிரஸ்.
இதற்கிடையே, தவெக தரப்புடனும் ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருந்த போதும் கடைசி நேரத்தில் ப.சிதம்பரத்தை உள்ளே கொண்டு வந்து இழுபறிக்கு முற்றுப் புள்ளி வைத்தது திமுக. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒரு ராஜ்ய சபா சீட் என ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால்,
குறைந்தபட்சம் 35 தொகுதிகளை எதிர்பார்த்த ராகுலுக்கு இந்த உடன்படிக்கையில் துளியும் உடன்பாடு இல்லை இது தொடர்பாக செல்வப் பெருந்தகையை டெல்லிக்கே அழைத்து கடிந்து கொண்ட ராகுல், அவரிடம் ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே, “தேர்தல் முடிந்ததும் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிவிடுவேன்” என செல்வப்பெருந்தகை அறிவித்தாகக் கூறப்படுகிறது.
திமுக-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் நடக்கும் இத்தகைய மோதல் போக்கால் தான்,
ஸ்டாலினும் ராகுல் காந்தியும் இணைந்து பிரச்சாரம் செய்வது தள்ளிக்கொண்டே போனது. இத்தகையச் சூழலில் இன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி தனியாகப் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருப்பது கூட்டணிக்குள் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “செல்வப்பெருந்தகை மீது ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் உள்ளார். அதனால் தான் அவர் தமிழக பிரச்சாரத்திற்கு வர விருப்பம் காட்டவில்லை. முன்னதாக ஏப்ரல் 6-ம் தேதி புதுச்சேரியில் ராகுல் பிரச்சாரம் செய்த அதே நாளில் முதல்வர் ஸ்டாலினும் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.
இருவரும் ஒரே மேடையில் பேசுவதற்கான ஏற்பாடுகளை திமுக தரப்பு முன்னெடுத்தது. ஆனால், ராகுல் அதை திட்டமிட்டு தவிர்த்துவிட்டார். அதேபோல் அன்றைய தினம் காலையில் சென்னை விமான நிலையம் வந்த ராகுல் காந்தியை வரவேற்க வர வேண்டாம் எனவும் செல்வப்பெருந்தகைக்கு முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டது.விஜய்யின் வருகையால் சிறுபான்மையினர் வாக்குகள் திசைமாறி விடுமோ எனப் பதறும் திமுக, அந்த வாக்குகளைத் தக்கவைக்க ராகுல் காந்தியின் பிரச்சாரம் மிக அவசியம் என நம்பியது.
இந்த நிலையில், ‘காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளிலாவது பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று ராகுல் தமிழகம் வருகிறார். இன்று காலை பொன்னேரியிலும் மதியம் சோளிங்கரிலும் மாலை துறையூர் தொகுதியிலும் நடக்கும் பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து கொண்டு வாக்குச் சேகரிக்கிறார்.
என்றாலும் ராகுலும் ஸ்டாலினும் ஒரு இடத்தில் கூட கூட்டாக பிரச்சாரம் செய்யாதது இரண்டு கட்சி தொண்டர்களையும் கவலையடையச் செய்திருக்கிறது” என்றனர்.