
தெஹ்ரான்: ஏப்ரல் 30-
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் தற்போது தணிந்திருந்த பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.
ஈரான் பயன்படுத்தப்போகும் இந்தப் புதிய ஆயுதம், இஸ்லாமியக் குடியரசின் எதிரிகளுக்கு “இதய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், தங்களை வம்புக்கு இழுத்தால் ஜாக்கிரதை என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் அனுப்பிய மூன்று அம்சக் கோரிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். மேலும், இஸ்லாமியக் குடியரசு ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் மிரட்டியுள்ளார். அமெரிக்கா இக்கோரிக்கைகளை நிராகரித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் குழாய்கள் விரைவில் “வெடிக்கக்கூடும்” என்று கூறப்பட்ட பின்னணியில் ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடற்படை தளபதியின் பதிலடி:
ஈரான் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி இதுகுறித்துக் கூறுகையில், “எதிரிகள் கடுமையாக அஞ்சக்கூடிய ஒரு புதிய ஆயுதத்துடன் மிக விரைவில் அவர்களை ஈரான் எதிர்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானிய இராணுவத்தை முற்றிலும் அழித்துவிடுவோம் என்ற டொனால்ட் ட்ரம்பின் கூற்றை அவர் கேலி செய்துள்ளார். “ஈரானுக்கு எதிராகத் தூண்டப்படாத ஆக்கிரமிப்பு மூலம் குறுகிய காலத்தில் இலக்கை அடைய நினைத்தவர்களின் முயற்சி, இராணுவ அகாடமிகளில் ஒரு நகைச்சுவையாக மாறிவிட்டது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் குழாய்கள் மீதான பொருளாதாரத் தடை:
முன்னதாக, அமெரிக்காவின் இராணுவ முற்றுகையால் ஈரானின் எரிவாயு குழாய்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் விரைவில் வெடிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ளாத வரை இந்தத் தடைகள் தொடரும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் ட்ரம்பின் இந்த எச்சரிக்கையை ஈரான் கிண்டல் செய்துள்ளதுடன், அவருடைய எச்சரிக்கையையும் மீறி இதுவரை எந்த ஒரு எண்ணெய் கிணறும் வெடிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் மீண்டும் போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் சண்டை நடந்தால் அது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிபுணர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.




















