Home செய்திகள் தேசிய செய்திகள் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு

சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு

போபால்: மே 1 –
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் அணைப் பகுதியில், நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையினால் இயக்கப்படும் இந்த படகில் மொத்தம் 29 பயணிகள் இருந்தனர். ஜபல்பூர் அருகே உள்ள கமாரியா தீவுப் பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய புயல் தாக்கியது. இதில் நிலைதடுமாறிய படகு நீரில் மூழ்கியது.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் 15 பயணிகள் தட்டுத்தடுமாறி நீந்தி கரை சேர்ந்த நிலையில், இதுவரை இரண்டு பெண்கள் உட்பட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 10 பேர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும், அணையின் ஆழமான பகுதி மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்புப் பணியில் பெரும் சவால்கள் நிலவின.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.