Home மாவட்டங்கள் பெங்களூர் தவெகவின் வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம்

தவெகவின் வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம்

சென்னை: மே 5-
தமிழக அரசியலில் 2024 – 2026 காலகட்டம் ஒரு மாபெரும் டிஜிட்டல் மாற்றத்துக்கான சாட்சியாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் சக்தியின் எழுச்சியும், அதன் வெற்றியில் இன்ஸ்டாகிராம் ஆற்றிய பங்கும் அரசியல் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.பாரம்பரிய அரசியல் கட்சிகள் மேடைப் பேச்சுகள், போஸ்டர் சண்டைகள், தெருமுனை கூட்டங்கள் என்ற பழைய பாணி பிரச்சார உத்திகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், ஒரு தனி உலகமாக இயங்கிக் கொண்டிருந்த ஜென்ஸீ தலைமுறையை இன்ஸ்டாகிராம் வாயிலாகக் குறிவைத்து வென்றெடுத்துள்ளது தவெக.
தமிழக அரசியலில் ஒரு புதிய கட்சி முளைத்து, அது குறுகிய காலத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பெரும் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்டுகொண்டிருந்த தமிழக அரசியல் களத்தில், தமிழக வெற்றிக் கழகம் இதைச் சாத்தியமாக்கியுள்ளது. இதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான வெர்ச்சுவல் ஆயுதம்தான் இன்ஸ்டாகிராம். ஜென்ஸீ என்று அழைக்கப்படும் இன்றைய இளைஞர்களின் உலகத்தை மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டு, அவர்களை அதீத அரசியல் ஆர்வம் மிக்கவர்களாக்கியதில் தவெக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இன்றைய 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள், அதாவது ஜென்ஸீ தலைமுறை, மற்ற தலைமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் செய்தித்தாள்களைப் படிப்பதில்லை, தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதில்லை. வாசிப்புப் பழக்கம் அறவே கிடையாது. இவர்களுக்கான உலகம் ஸ்மார்ட்போன்களுக்குள் மட்டுமே சுருங்கியுள்ளது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் என்பது இவர்களைப் பொறுத்தவரை தனி உலகம்.