
புதுடெல்லி: மே 7-
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யின் தவெக கட்சி, ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை. அதனால் முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு இதேபோன்ற நிலை புதிதாக தொடங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கும் ஏற்பட்டது. அப்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்தது. அதன்பின், காங்கிரஸின் ஆதரவுடன் அமைந்த கேஜ்ரிவால் அரசு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தது.இப்போது தமிழகத்தில் மக்கள் தீர்ப்பை மதிப்பதற்காகவும் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் விஜய்க்குத் ஆதரவு தருவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இதன் மூலம், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவளித்ததன் மூலம் டெல்லியில் காங்கிரஸ் செய்த அதே தவறை, தமிழகத்திலும் செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸின் ஆதரவுடன் கேஜ்ரிவாலின் முதல் அரசு டெல்லியில் அமைந்தது. ஆனால், அந்த ஆட்சி வெறும் 49 நாட்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் டெல்லியில் மறுதேர்தல் நடைபெற்றது. அதில், ஆம் ஆத்மி கட்சி 56 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. அப்போது தொடர்ந்து 15 ஆண்டுகளாகக் காங்கிரஸ் முதல் அமைச்சராக ஷீலா தீட்சித் இருந்தார். அந்தச் சூழ்நிலையில் மறு தேர்தல் நடந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று கணக்கிட்ட காங்கிரஸ் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. கடந்த 2013-ல் கேஜ்ரிவாலுக்கு ஆதரவளித்த காங்கிரஸ், 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் ஓர் இடத்தைக் கூடப் பெற முடியாமல் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸின் வாக்கு வங்கியைச் சிதைத்தது காரணமானது. இதையே அக்கட்சி தொடர்ந்து டெல்லியில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் காங்கிரஸுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது.


















