
பெலகாவி, மே 28
கர்நாடக மாநில பேரிடர் மீட்புப் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் சௌகலா (வயது 37). இவர் பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா நகரில் வசித்து வந்தார்.
இன்று காலை இவரது வீட்டின் படுக்கையறை கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர், உடனடியாக எஸ்.டி.ஆர்.பி. ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார்
விரைந்து வந்த ஊழியர்கள் மற்றும் போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஸ்ரீஷைல் சௌகலா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த அவரது உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரை உருகவைத்தது.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் சௌகலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் (BIMS) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்யம்பாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


















