Home செய்திகள் தேசிய செய்திகள் ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

புதுடெல்லி: மே 28-
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏப்.9-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தெற்கு ஈரானில் உள்ள ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது போர்நிறுத்த அத்துமீறல் என ஈரான் குற்றச்சாட்டு வைத்தது. இந்நிலையில், இன்று (மே 28) ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. தற்காப்பு கருதி இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அதோடு பந்தர் அப்பாஸில் ட்ரோன்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தையும் அமெரிக்கா தாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இந்த ட்ரோன்கள் அச்சுறுத்தலாக விளங்கியது என அமெரிக்கா விளக்கம் தந்துள்ளது.
இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க ராணுவ தளம் மீது உள்ளூர் நேரப்படி இன்று காலை 4.30 மணிக்கு இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் எந்த பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து ஈரான் உறுதி செய்யவில்லை. அதோடு அமெரிக்கா மீது போர் நிறுத்த அத்துமீறல் குற்றச்சாட்டை ஈரான் வைத்துள்ளது. இரு தரப்புக்கு இடையிலும் அமைதி உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே இந்த தாக்குதல் முடிவுக்கு வரும்.