Home மாவட்டங்கள் பெங்களூர் அழகி வலையில் விழுந்த சாப்ட்வேர் இன்ஜினியர்: ரூ.1.66 கோடி பறிபோனது

அழகி வலையில் விழுந்த சாப்ட்வேர் இன்ஜினியர்: ரூ.1.66 கோடி பறிபோனது

பெங்களூரு: மே 28-
டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான அழகியின் ஆசை வார்த்தைகளை நம்பி, சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் ரூ.1.66 கோடியை இழந்து ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம நடந்துள்ளது. இதுகுறித்து தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சௌரவ் துபே. இவருக்கு கடந்த பிப்ரவரி 15-ந் தேதி ‘டன்டன்’ (TanTan) என்ற பிரபல டேட்டிங் ஆப் மூலம் ‘ரியா அகர்வால்’ என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் சாட்டிங் மூலம் தொடங்கிய இவர்களது பழக்கம், நாளாக நாளாக நெருங்கிய நட்பாக மாறியது.
இதையடுத்து, அந்தப் பெண் சௌரவ்வின் செல்போன் எண்களைப் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் மூலம் பேசி அவரது முழு நம்பிக்கையையும் பெற்றாள். அதுமட்டுமின்றி, தான் சௌரவ்வை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறி நம்ப வைத்தாள். சௌரவ் தன்னை முழுமையாக நம்புகிறார் என்பதை உறுதி செய்து கொண்ட ரியா, ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால், மிகக் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினாள்.
திருமணம் செய்யப்போகும் பெண்ணின் வார்த்தைகளை உண்மை என்று நம்பிய அந்த டெக்கி (சாப்ட்வேர் இன்ஜினியர்), கடந்த மூன்று மாதங்களில் பல கட்டங்களாக பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் 1.66 கோடி ரூபாயை முதலீடு செய்தார்.
கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்த பிறகு, சௌரவ்வுக்குத் திரும்பக் கிடைத்தது வெறும் 4,250 ரூபாய் மட்டும்தான். இதனால் சந்தேகமடைந்த சௌரவ், தனக்கு வரவேண்டிய லாபப் பணம் மற்றும் அசல் தொகையைத் திருப்பித் தருமாறு ரியாவிடம் கேட்டுள்ளார்.
எப்போது சௌரவ் பணத்தைக் கேட்கத் தொடங்கினாரோ, உடனடியாக அந்தப் பெண் தனது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டாள். தான் முழுமையாக ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த சௌரவ் அதிர்ச்சியில் உறைந்தார்.
இறுதியில், பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் சௌரவ் துபே, தென்கிழக்கு மண்டல சென் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மோசடி செய்த பெண் மற்றும் அவளது வங்கி கணக்குகளைக் கண்காணித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், “டேட்டிங் ஆப்புகளில் அறிமுகமாகும் மர்ம நபர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்” என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.