Home தலைப்பு செய்தி மூலதன ஆதாய வரி முழு ரத்து

மூலதன ஆதாய வரி முழு ரத்து

புதுடெல்லி, ஜூன் 4-
இந்தியப் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் ஊட்டும் நோக்கில் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்திய அரசு பத்திரங்களில் (கவர்மெண்ட் பாண்ட்ஸ்) முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான மூலதன லாப வரியை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதைத் தடுக்கவும், நாட்டின் கடன் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த புதிய விதிமுறை உடனடியாக அமலுக்கு வரும். தற்போதைய விதிகளின்படி, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 12 மாதங்களுக்கும் மேலாக வைத்திருக்கும் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் மீது 12.5 சதவீத நீண்டகால மூலதன லாப வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், புதிய முடிவின்படி அரசு பத்திரங்கள் மீதான இந்த வரி இனி முழுமையாக நீக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பத்திரங்களின் வட்டி வருமானத்திற்கு விதிக்கப்பட்டு வந்த 20 சதவீத வெளிநாட்டு வரி சுமையிலிருந்தும் விலக்கு அளிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, நடப்பு 2026 ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைத் திரும்பப் பெற்றுள்ளனர். இந்திய வரலாற்றிலேயே முதலீடுகள் இவ்வளவு பெரிய அளவில் வெளியேறியது இதுவே முதல் முறையாகும். இந்தச் சூழ்நிலையில், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையாமல் தடுக்க இந்த சீர்திருத்தம் பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது. இந்த வரி விலக்கு காரணமாக உலக சந்தையில் இந்திய அரசு பத்திரங்கள் அதிக ஈர்ப்பைப் பெறும். இதனால் நாட்டுக்குள் டாலர் வரத்து கணிசமாக அதிகரிக்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் போது, இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் குறைந்து அதன் மதிப்பு ஸ்திரத்தன்மை பெறும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படக்கூடிய நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் பணவீக்க அச்சத்தை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த நாட்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.