
முலான்பூர், ஜூன் 6- இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் முலான்பூரில் இன்று தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி கடந்த முறை சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக இழந்திருந்தது. இதனால் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எளிதாக எடுத்துக்கொள்ளாது என்றே கருதப்படுகிறது. பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்குவார்கள். 3-வது இடத்துக்கு சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. சாய் சுதர்சன் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27.4 சராசரியுடன் 302 ரன்களே சேர்த்துள்ளார். எனினும் அவரது திறனை சோதிக்கும் வகையில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது இடத்தில் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்குவார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் இடம் பெறக்கூடும். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா இடம் பெறுவார்கள். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் அவரது இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் மானவ் சுதர் அல்லது ஹர்ஷ் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இதில் ராஜஸ்தானை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதரே இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த ஓரிரு நாட்களாக நடந்த வலைப்பயிற்சியின் போது மிகவும் நேர்த்தியான, பாரம்பரியமான பந்துவீச்சு முறையையும் பந்தைக் காற்றில் மிதக்கவிட்டு ஏமாற்றும் திறனையும் மானவ் சுதர் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் பேட்டின் வெளிப்பக்க விளிம்பிற்கும், அதே நேரத்தில் உள்பக்க விளிம்பிற்கும் சவால் விடும் சிறப்பான திறமையையும் கொண்டுள்ளார். அதேவேளையில் பிரதான சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம் பெறக்கூடும். ஆல்ரவுண்டர் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணி சர்வதேச டெஸ்ட் அரங்கில் குறைந்த அளவிலான போட்டிகளிலேயே வெற்றி கண்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூருவில் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி இருந்தது. 2 நாட்களிலேயே முடிவடைந்த இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. இதன் பின்னர் தற்போது வரை ஆப்கானிஸ்தான் அணி மேற்கொண்டு 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது.





















