
பெங்களூரு: ஜூன் 6-
கர்நாடக அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, அமைச்சர் ராமலிங்க ரெட்டியை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இருப்பினும், இந்த இலாகா விவகாரத்தில் இன்னும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
பெங்களூரு நகர வளர்ச்சித்துறை இலாகாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் ராமலிங்க ரெட்டி, தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவரது முடிவை மாற்ற காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், ராமலிங்க ரெட்டி தனது நிலையில் உறுதியாக இருக்கிறார்.
பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று நள்ளிரவு 2 மணி வரை ராமலிங்க ரெட்டியுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ராமலிங்க ரெட்டியை நேரில் சந்தித்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார
பெங்களூரு நகர வளர்ச்சித்துறை இலாகாவை உங்களுக்கு ஒதுக்குவது குறித்து டெல்லி மேலிடத்திடம் பேசுகிறோம். ஒருவேளை மேலிடம் சம்மதிக்கவில்லை என்றால், வேறு நல்ல இலாகாவை பெற்றுத் தருகிறோம். அதற்கு ஒத்துக்கொள்ளுங்கள்” என்று சுர்ஜேவாலா, முதல்வர் டி.கே.சிவகுமாரும் ராமலிங்க ரெட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், இந்த இலாகா சிக்கலுக்கு தீர்வு காண்பது இப்போது காங்கிரஸ் மேலிடம் கையில் தான் உள்ளது.
ஆனால், பெங்களூரு நகர வளர்ச்சித்துறையை தவிர வேறு இலாகா கொடுத்தால் ராமலிங்க ரெட்டி ஏற்றுக்கொள்ள வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இதனால், டெல்லி மேலிடத்தை முதல்வர் டி.கே.சிவகுமாரும், சுர்ஜேவாலாவும் எப்படி சம்மதிக்க வைக்கப் போகிறார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சுர்ஜேவாலா நடத்திய பேச்சுவார்த்தையின் போது ராமலிங்க ரெட்டி, “நான் மாணவர் காங்கிரஸ் காலத்தில் இருந்தே பெங்களூருவில் தான் அரசியல் செய்து வருகிறேன். பெங்களூரு நகரைப் பற்றி எனக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். எனவே, எனக்கு பெங்களூரு நகர வளர்ச்சித்துறையைக் கொடுங்கள், சிறப்பான வேலைகளைச் செய்து காட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சுர்ஜேவாலா “இலாகா ஒதுக்கீடு என்பது மேலிடம் எடுத்த முடிவு. அதனால், மேலிட உத்தரவை மீற முடியாது. நாங்கள் மேலிடத்திடம் பேசுகிறோம். ஒருவேளை அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், நீர்வளத்துறை தவிர வேறு முக்கிய இலாகாவை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், கூடுதலாக வேறு இலாகாவை வழங்குவது குறித்தும் மேலிடத்துடன் பேசுகிறோம்” என்று கூறியதாகத் தெரிகிறது.
ராமலிங்க ரெட்டி தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுவிடுவார் என்று முதல்வர் தரப்பு வட்டாரங்கள் கூறினாலும், அவர் இதுவரை ராஜினாமாவை வாபஸ் பெறவில்லை. இதனால் இந்த அரசியல் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் என்ன அதிரடி முடிவு எடுக்கப் போகிறது என்பதை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
இது எங்கள் குடும்ப பிரச்சனை – டி.கே.சிவகுமார்: இது எங்கள் குடும்ப பிரச்சினை, நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். நான் முதல்வர், அவர் (ராமலிங்க ரெட்டி) அமைச்சர். இருந்தாலும் நாங்கள் அனைவரும் நண்பர்கள். ராமலிங்க ரெட்டி கட்சியில் மிக மூத்த தலைவர். பெங்களூருவில் கட்சியை காப்பாற்றி, வளர்த்து வருபவர் அவர்தான்” என்று முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை ராமலிங்க ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, தனியார் ஓட்டல் முன்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ராமலிங்க ரெட்டியின் கோபம் தணிந்துவிட்டதா என்று கேட்டதற்கு, “நாங்கள் இலாகா விஷயமாக என்ன பேசினோம், வேறு என்னென்ன விஷயங்களை விவாதித்தோம் என்பதையெல்லாம் ஊடகங்களுக்கு முன்னால் சொல்ல முடியுமா?” என்று அவர் திருப்பி கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த அரசியல் பரபரப்பு குறித்து கேட்டபோது, “இதெல்லாம் அரசியலில் சாதாரண விஷயம் தான். மழை, இடி, மின்னல் தோன்றுவதும், சூரியன் மறைந்து உதிப்பதும் இயற்கையானது போல இதுவும் சகஜம்” என்றார்.
ராமலிங்க ரெட்டி இலாகா மாற்றத்திற்கு ஒத்துக்கொண்டாரா என்று கேட்டதற்கு, “அவர் கட்சியை விட்டா போகப்போகிறார்? அப்படி ஏதாவது சொன்னாரா? தனக்கு ஏற்பட்ட வருத்தத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். சில தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன, அதை சரிசெய்து விடுவோம்” என்று டி.கே.சிவகுமார் கூறினார்.


















