
கொல்கத்தா, ஜூன் 9- மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ஃபால்டா தொகுதியில் போட்டியிட்டவர் ஜஹாங்கீர் கான். திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் ஆவார். இந்நிலையில், ஃபால்டாவில் வாக்காளர்களை ஜஹாங்கீர் கான் அச்சுறுத்தியதாக புகார் எழுந்த நிலையில் அங்கு தேர்தல் பார்வையாளராக இருந்த உ.பி. ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். இதற்கு ஜஹாங்கீர் கான், “அவர் சிங்கம் என்றால் நான் புஷ்பா” என்று கூறி தன்னை ‘புஷ்பா‘வாக (திரைப்படம்) அடையாளப்படுத்திக் கொண்டார். தேர்தல் முறைகேடு புகார் தொடர்பாக ஃபால்டாவில் மறுவாக்குப் பதிவு அறிவிக்கப்பட்டது. வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் ஜஹாங்கீர் கான் திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இத்தொகுதியில் பாஜக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு ஜஹாங்கீர் கான் மீது வாக்காளர்களை மிரட்டுதல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொல்கத்தா உயர் நீதிமன்றம் அவருக்கு வழங்கியிருந்த இடைக்கால பாதுகாப்பை ரத்து செய்தது. இதையடுத்து, அவரை இந்திய – நேபாள எல்லையில் மேற்கு வங்க சிறப்பு அதிரடிப் படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.



















