
புதுடெல்லி, ஜூன் 9-
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்காக இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் இருந்து நன்கொடை குவிந்து வருகிறது. ரொக்கம் மட்டுமல்லாமல் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களும் நன்கொடையாக அளிக்கப்படுகின்றன.
இந்த சொத்துகளை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், நன்கொடை விவரங்கள் சரியாக வெளியிடப் படவில்லை என்றும் குறிப்பிட்ட தொகையைக் காணவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என உ.பி.எதிர்க்கட்சி யான சமாஜ் வாதியின் தலைவர் அகிலேஷ் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து முன்னாள் முதல்வரான அகிலேஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை மூலம் பக்தர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் கோயில் அறக்கட்டளைக்கும் ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.
இது குறித்து இதுவரை யாரும் ஏன் விளக்கம் அளிக்க முன்வரவில்லை? இதற்கு பதிலளிக்காமல் ராமர் கோயில் அறக்கட்டளை மவுனமாக உள்ளது. இது ராம பக்தர்களுக்கு ஆழ்ந்த கவலையளிக்கும் விஷயம். இதில் வெளிப்படைத்தன்மை தேவை. லட்சக் கணக்கான பக்தர்களின் நம்பிக்கையோடு நேரடியாகத் தொடர்புடைய விவகாரம் என்பதால், இதுகுறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோயில் அறக்கட்டளைக்கு கடந்த 2025- 26 நிதியாண்டில் சுமார் ரூ.220.81 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பெரும்பகுதி பக்தர்களின் நன்கொடை மற்றும் காணிக்கை மூலமாகவே கிடைத்துள்ளது. இதில் ‘ராம் லல்லா’ (குழந்தை ராமர்) சன்னதியில் உள்ள காணிக்கைப் பெட்டிகள் மூலம் அதிகபட்சமாக ரூ.54.79 கோடி வசூலாகியுள்ளது. ஏப்ரல் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை, நன்கொடை கவுண்ட்டர்கள் மூலம் ரூ.18.88 கோடியும், இணைய வழி நன்கொடை மூலம் ரூ.8.33 கோடியும் கிடைத்துள்ளன.
வெளி நாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து ரூ.78 லட்சம் நன் கொடையாகப் பெறப்பட்டுள்ளது. நன்கொடை தவிர, வங்கி வைப்புத்தொகை மீதான வட்டி மூலம் அறக்கட்டளைக்கு சுமார் ரூ.138 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் அதன் மொத்த வருவாய் ரூ.220 கோடியைத் தாண்டியுள்ளது. இதுபோல், ராமர் கோயில் அறக்கட்டளை மீது புகார்கள் எழுவது முதன் முறை அல்ல.
இதற்கு முன், அயோத்தியில் நிலம் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அகிலேஷ் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அந்தக் குற்றச்சாட்டுகளை அறக்கட்டளையும் அதன் பொதுச் செயலாளர் சம்பத் ராயும் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் கோடிக் கணக்கான ரூபாய் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



















