Home மாவட்டங்கள் பெங்களூர் கரூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு

கரூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழப்பு

கரூர்: ஜூன் 9-
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 மாத கர்ப்பிணி, கணவர், ஓட்டுநர் உயிரிழந்தனர். 2 வயது குழந்தை, இருசக்கர வாகன ஓட்டுநர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அரவிந்த் (30). இவர் மனைவி 8 மாத கர்ப்பிணியான ஜனனி (28). இவர்கள் மகள் துவிதா (2). மூவரும் குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டு காரில் நேற்று உசிலம்பட்டி திரும்பிக் கொண்டிருந்தனர். காரை உசிலம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த வீரா (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இன்று (ஜூன் 9ம் தேதி) காலை 6 மணி அளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஈச நத்தம் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் திடீரென இடது புறம் திரும்ப முயன்று வேகத்தை குறைக்கவே, வாகன மோதலை தவிர்க்க காரை திருப்ப முயன்ற ஓட்டுநர், இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் மீதும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த கார் ஓட்டுநர் வீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அரவிந்த், அவர் மனைவி ஜனனி, துவிதா ஆகியோரை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். இதில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அரவிந்த், ஜனனி ஆகியோர் உயிரிழந்தனர். இதில் சிறுமி துவிதா, இருசக்கர வாகன ஓட்டுநர் அரவக்குறிச்சி கலைவாணர் தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை (32) ஆகிய இருவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அரவக்குறிச்சி போலீஸார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.