
பெங்களூரு: ஜூன் 10-
பெங்களூரு பானசவாடி பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாகச் சென்ற ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதிய விபத்தில், ஸ்விகி ஊழியரான கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பெங்களூரு பானசவாடி ராமசாமிபாளையத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் டேனியல் (வயது 19). இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டே, குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதிநேரமாக ஸ்விகி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், சந்தோஷ் டேனியல் தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் ராமசாமிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டரின் பின்னால் ஜீவிதா என்ற பெண் அமர்ந்திருந்தார்.
கார்ப்பரேஷன் வங்கி முன்பாக ஸ்கூட்டர் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் டேனியலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னாலிருந்த ஜீவிதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாணசவாடி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான சந்தோஷ் டேனியலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


















