Home மாவட்டங்கள் பெங்களூர் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பிடுதி டவுன்ஷிப் திட்டம் ரத்து

பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பிடுதி டவுன்ஷிப் திட்டம் ரத்து

பெங்களூரு: ஜூன் 13-
பிடதியில் நகரியம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் இறுதி அறிவிப்பாணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், “அடுத்து பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், இந்த ஒட்டுமொத்த நிலம் கையகப்படுத்தும் செயல்முறையும் உடனடியாக ரத்து செய்யப்படும்” என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகமான ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயப் பெருங்குடி மக்கள் சுமார் 470 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதைப்பற்றியெல்லாம் இந்த அரசுக்கு கவலையில்லை. விவசாயிகளின் போராட்டத்தை துச்சமாக மதித்து, நகரியத்திற்காக வளமான விவசாய நிலங்களை பறிக்க இறுதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் அரசு. இதன் மூலம் இந்த அரசின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது.
முதலமைச்சர் அவர்களே! மாநில விவசாயிகளை நீங்கள் பலவீனமானவர்கள் என்று நினைத்தால் அது உங்கள் மிகப்பெரிய தவறு. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் உங்களது மக்கள் விரோத அரசு வரலாற்றின் பக்கங்களில் மறைந்துவிடும்.”இவ்வாறு ஆர்.அசோக் சாடியுள்ளார்.