
அகமதாபாத்: ஜூன் 13-
கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ-171 சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 260 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்திலிருந்து விஸ்வாஸ்குமார் ரமேஷ் (39) என்பவர் மட்டும் உயிர்பிழைத்தார். விபத்து நடந்த இடத்திலிருந்து ரத்தம் தோய்ந்த சட்டையுடனும், கையில் செல்போனுடன் இவர் நடந்து வரும் வீடியோ அப்போது இணையத்தில் வைரலானது.இந்நிலையில் நேற்றுடன் இந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனாலும் இந்த படுபயங்கரமான இந்த விபத்தை மறக்க முடியாமல் தவித்து வருகிறார் விஷ்வாஸ் குமார் ரமேஷ்.இதுகுறித்து தனது ஆலோசகர் சஞ்சீவ் படேல் என்பவர் மூலம் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “விபத்து இப்போதுதான் நடந்தது போல் இருக்கிறது. ஆனால் ஓராண்டு கடந்து விட்டது. ஓராண்டாகியும் தூக்கம் இல்லாத இரவுகள், பதற்றம், மறக்க முடியாத நினைவுகளுடன் நான் தவித்து வருகிறேன்.
விபத்து நடந்து முடிந்து ஓராண்டுக்குப் பிறகும், நான் என் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கவும், என்னால் இயன்றவரை என் குடும்பத்துக்கு ஆதரவளிக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். இந்த விபத்தில் எனது சகோதரர் அஜயை நான் இழந்துவிட்டேன்’’ என்றார்.இந்த விபத்து தொடர்பாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “ஏஐ-171 விமான விபத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அக்கறையுடனும் கருணையுடனும் ஆதரவளிக்க ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது” என்றார்.


















